புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய பென்சீன் (Benene) எனப்படும் ரசாயனத்தின் ஆபத்து அதிகம் உள்ளதாகக் கூறி Dove, Nexuss, Suave, Tressme, Tigi போன்ற உலர்ரக ஷாம்புக்களை (dry shampoo) யூனிலிவர் நிறுவனம் திரும்பப் பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசாயனங்கள் இன்றி எந்தவொரு தயாரிப்பும், இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்படுவதில்லை. பொருள்கள் கெட்டுப்போகாமல் இருக்க, நீண்டநாள் வரை புதிதாக இருக்க என அனைத்திற்கும் வெவ்வேறு வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் பல தயாரிப்புகளில் கலவைகளிலேயே அதிகப்படியான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை அறியாமல் மக்கள் உபயோகிக்கும் பட்சத்தில், பல நோய்களில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர்.

இதனால் பல பிராண்டு தயாரிப்புகளில் அவ்வப்போது, ரசாயனங்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்து சர்ச்சைகள் எழுகின்றன. அதைத் தொடர்ந்து அந்த நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதுண்டு அல்லது சில தயாரிப்புகளுக்குத் தடை விதிக்கப்படுவது வழக்கம். அந்த வரிசையில் யூனிலிவர் நிறுவனம் தனது சில தயாரிப்புகளை தற்போது திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. Dove, Nexuss, Suave, Tressme, Tigi போன்ற உலர்ரக ஷாம்புக்களை (dry shampoo) யூனிலிவர் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிறுவன ஷாம்பு தயாரிப்புகளில், குறிப்பாக டவ் ஷாம்புக்களில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பென்சீன் (Benene) எனப்படும் ரசாயனத்தின் ஆபத்து அதிகம் உள்ளதாக யூனிலிவர் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், ஷாம்புக்களில் எந்த அளவுக்கு பென்சீன் உள்ளது என நிறுவனம் இதுவரை கூறவில்லை. எனவே, அக்டோபர் 2021 வரை தயாரிக்கப்பட்ட யூனிலிவர் நிறுவன உலர்ரக ஷாம்புக்களை திரும்பப் பெற்று வருகிறது. பென்சீன் அளவை காரணம் காட்டி ஷாம்பூக்கள் திரும்பப் பெறப்படுவது இது முதல் முறையல்ல, ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் P&G தயாரிப்பான Pantene மற்றும் Herbal Essences ஷாம்புக்கள் சந்தையில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஷாம்பு பயன்படுத்துவோரை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.