சிங்கப்பூரைச் சேர்ந்த பிரபல ஆன்லைன் பேமெண்ட் மற்றும் ஷாப்பிங் நிறுவனமான ஷாப்பேக் (ShopBack), தனது 10 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கசிய விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அந்நிறுவனத்திற்கு 74,400 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஷாப்பேக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் டேட்டாபேஸ் 2020ஆம் ஆண்டு ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு ஆணையம் (PDPC) அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது. இதன் மூலம் மின்னஞ்சல் முகவரிகள், பெயர்கள், செல்போன் எண்கள், வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்கள் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹேக்கர்கள் ஷாப்பேக் நிறுவனத்தின் டேட்டாபேஸில் நுழைந்து, இந்த தகவல்களைத் திருடியுள்ளனர். திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் கிட்ஹப் (GitHub) தளத்தில் 15 மாதங்களுக்கு யார் வேண்டுமானாலும் கையாளும் வகையில் இருந்திருக்கிறது.
தகவல் திருட்டு குறித்து ஷாப்பேக் நிறுவனம், செப்டம்பர் 25, 2020 அன்று தனிப்பட்ட தரவு பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளித்தது. பின்னர், வாடிக்கையாளர்களிடம் இருந்தும் 2 புகார்களும் ஆணையத்திற்கு வந்தது. சுமார் 14.5 லட்சம் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள், 8.4 லட்சம் பயனர்களின் பெயர்கள், 4.5 லட்சம் மொபைல் எண்கள், 1.4 லட்சம் முகவரிகள், 3 லட்சம் வங்கிக் கணக்கு எண்கள் ஆகியவை கசிந்துள்ளன. மேலும், 3.8 லட்சம் பயனர்களின் சில கிரெடிட் கார்டு தகவல்களும் திருடப்பட்டுள்ளன.