சென்னை அம்பத்தூர் பகுதியில் ஒரு சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு, அரசுத்துறை ஆவணங்களை போலியாக தயார் செய்ததாகவும், நிலம் குறித்த ஆவணங்களை பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் வட்டாட்சியர் ராஜசேகர் புகார் வழங்கியுள்ளார்.
இந்த புகாரினடிப்படையில் அம்பத்தூர் ஒரகடம் வெங்கடேஸ்வரா நகரை சார்ந்த வின்சென்ட்(85), அம்பத்தூர் சோளம்மேடு பகுதியைச் சார்ந்த பினு(41) உள்ளிட்ட 2 பேரையும் போலி ஆவணங்களை தயார் செய்தபோது கையும், களவுமாக காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் அவர்களிடம் ஜாதி சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், நில அளவை பட்டா மற்றும் அரசு பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற போலி ஆவணங்களை பறிமுதல் செய்திருக்கிறார்கள். 10க்கும் அதிகமான ரப்பர் ஸ்டாம்புகள் உள்ளிட்டவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று ஆள் மாறாட்டம், மோசடி, போலி ஆவணம் தயார் செய்தல், பத்திர ஆவணங்களை தயார் செய்தல் போன்ற 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர். மேலும் இவர்கள் யார், யாருக்கெல்லாம் எந்தெந்த அரசு ஆவணங்களை போலியாக தயார் செய்து வழங்கினார்கள், என்ற விதத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.