உங்கள் அக்கவுண்ட்டில் இவ்வளவு பணம் கிரெடிட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த லிங்கை கிளிக் செய்து உங்கள் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள். இது நம்மில் பெரும்பாலானோருக்கு அடிக்கடி வரக்கூடிய மெசேஜ்களில் ஒன்று. இப்படி மெசேஜ் வந்தால் அதை க்ளிக் செய்யக்கூடாது என்று வங்கிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும் நமது ஜாதகங்களில் கெடுபலன் உச்சத்தில் இருந்தால் அந்த எச்சரிக்கை எல்லாம் ஞாபகத்தில் வராது போலும். இப்படி ஒரு சம்பவத்தில் சிக்கியிருக்கிறார் பிரபல நடிகரின் சகோதரர். அது வேறு யாரும் இல்லை. நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சியின் சகோதரர் செல்வகுமார் தான் இப்படி ஒரு ஆன்லைன் மோசடிக்கு தற்போது ஆளாகி உள்ளார்.
அவரது கூற்றுப்படி பார்த்தால், இப்படியான குற்றங்கள் குறித்த எச்சரிக்கை உணர்வு அவருக்கு முன்பே இருந்திருக்கிறது. அப்படி இருந்தும் கூட ஏமாந்திருக்கிறார் என்றால் ஏமாற்றுக்காரர்களின் கிரிமினல் உத்தியையும், புத்தியையும் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர்கள் எத்தனை திறமையாக தங்களது ஏமாற்று வலையைப் பின்னி இருக்கிறார்கள் என்றால், அப்படியே ஒரிஜினல் வங்கி லோகோ போலவே செட் செய்து தங்களுக்கான ஃப்ராடு வலைத்தளத்தை அமைத்திருக்கிறார்கள். அவர்களால் அனுப்பப்படும் லிங்கை க்ளிக் செய்தால் அது உடனடியாக நம்மை அந்த தளத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த தளத்தில் நமது அக்கவுண்ட்டில் இருக்கும் தொகையைச் சோதிக்கத் தொடங்கினோம் எனில் நமது தகவல்கள் அவர்களால் திருடப்பட்டு நமது வங்கிக் கணக்கில் இருந்து அவர்களால் பணத்தை திருட முடிகிறது. இதை தடுக்க எத்தனையோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தும் கூட சமயத்தில் நமது புத்தியை அடமானம் வைத்து விட்டு சூழலுக்கு இரையாகி சில செயல்களைச் செய்யுமாறு தூண்டப்பட்டு விடுகிறோம்.
இமான் அண்ணாச்சியின் தம்பியும் அதைத்தான் சொல்கிறார். எப்போதுமே உஷாராக இருக்கக் கூடிய நான், அன்று ஏன் அந்த லிங்கை க்ளிக் செய்தேன் என்றால், சில ஆப்கள் ரிவார்டு பாயிண்டுகள் தரும் அல்லவா, அதில் நிறைய பாயிண்டுகள் மிச்சமாகி இருக்கின்றன. அதைப் பயன்படுத்த இன்றே கடைசி நாள் என்று மெசேஜ் வந்தது. அவர்கள் அனுப்பிய லிங்கை க்ளிக் செய்ததும் அது வேறொரு தளத்தில் ஒரிஜினல் பேங்க் லோகோவுடன் திறந்தது. அதில் என்னுடைய அக்கவுண்ட் தகவல்களை பதிவு செய்ததுமே நிலைமை என் கட்டுப்பாட்டில் இல்லை. இத்தனைக்கும் நான் என் அண்ணன் மகனது உதவியுடன் தான் இதெல்லாம் செய்தேன். அவன் சொன்னபடி ஓடிபி வராமல் அக்கவுண்டில் இருந்து பணம் போகாது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் போச்சு… கிட்டத்தட்ட ரூ.2,20,000 ரூபாய்க்கும் மேலயே இழந்துட்டேன் என்கிறார்.
இதில் ஆறுதலான விஷயம் ஒன்று உண்டு. செல்வகுமார் தனக்கு நடந்த இந்த ஆன்லைன் ஃபிராடு குறித்து உடனடியாக 1903 என்ற ஹெல்ப் லைன் எண்ணில் புகார் பதிவு செய்திருக்கிறார். பணத்தை இழந்த 24 மணி நேரத்திற்குள் இந்த எண்ணில் புகார் பதிவு செய்தால் வங்கிகள் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்க வழி இருக்கிறது என்று காவல்துறை நண்பர் ஒருவர் சொல்லவே அதை உடனடியாகச் செய்து முடித்திருக்கிறார் செல்வகுமார். ஆகவே, அவருக்கு இழந்த பணத்தை திரும்ப மீட்க வழி இருக்கிறது என்று நம்பலாம்.