பருவமழை காலங்களில் பரவும் ”மெட்ராஸ் ஐ” எனும் கண் வலி நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது.
சென்னையில் கடந்த 3 நாட்களாக வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வரும் நிலையில், தற்போது ’Madras Eye’ எனும் கண்வலியால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்படும் மக்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். இது வழக்கத்தை விட தற்போது அதிகரித்துள்ளது.
’மெட்ராஸ் ஐ’ என்றால் என்ன?
கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று காரணமாகத்தான் மெட்ராஸ் ஐ ஏற்படுகிறது. இது காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவுகிறது. கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து போதல், நீர் சுரந்து கொண்டே இருந்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்தல் ஆகியவை முக்கிய அறிகுறி. வெளியே நடமாடும் போது கண் கூச்சமாக இருக்கும்.
ஆபத்து
இத்தகைய அறிகுறி இருப்பவர்கள் உடனே மருத்துவர்களை பார்க்க வேண்டும். பொதுவாக மெட்ராஸ் ஐ எனும் கண்வலியை பொறுத்தமட்டில் 50 சதவீதம் பேருக்கு தானாகவே சரியாக வாய்ப்புள்ளது. சிலருக்கு 3 நாட்களில், சிலருக்கு ஒரு வாரத்தில் கண்வலி குணமாகலாம். இன்னும் சிலருக்கோ 15 நாட்கள் வரை ஆகலாம். மேலும், கண்ணில் வேறு ஏதேனும் பிரச்சனை இருப்பினும் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது. அதோடு மருத்துவர்களின் பரிந்துரைப்படியே மருந்துகளை கண்ணில் பயன்படுத்த வேண்டும். நாமாகவே மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
கண்களை பார்த்தாலே பாதிப்பா?
பொதுவாக மெட்ராஸ் ஐ ஆல் பாதிக்கப்பட்ட ஒருவரின் கண்ணை பார்த்தால் மெட்ராஸ் ஐ அவருக்கும் பரவும் என்ற தகவல் உள்ளது. ஆனால், இதனை கண் மருத்துவர்கள் மறுத்துள்ளனர். அதாவது கண்வலியால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கண்ணை பார்ப்பதன் மூலம் மெட்ராஸ் ஐ இன்னொருவருக்கு பரவுவது இல்லை. மாறாக மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்ட நபரின் கண்ணீரில் இருந்து இந்த நோய் பரவும்.
தனிமைப்படுத்துதல்
இதனால் மெட்ராஸ் ஐ பாதித்த நபர் தன்னை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை கொண்டு கண்களை தொடக்கூடாது. மேலும் 10 நிமிடத்துக்கு ஒருமுறை கையை சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மெட்ராஸ் ஐ பாதித்த நபரின் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மெட்ராஸ் ஐ பரப்பும் வைரஸ் பொருட்களின் மேற்பரப்பில் நீண்டகாலம் வாழும். எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.