கோடை காலத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ஜூஸ் குடிப்பதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். பெரும்பாலமானவர்கள் பிரெஷ் ஜூஸ்க்களை விட கடையில் இருக்கும் ஜூஸ் பாக்கெட்டுகளை தான் அதிகமாக வாங்குகிறார்கள். தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது, அப்படி வெயிலின் தாக்கம் தாங்காமல் ஜூஸ் வாங்கியவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.
வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அடுத்த பி.க.புரம் பகுதியில் உணவகம் நடத்தி வருபவர்கள் சீனிவாசன் மற்றும் நதியா தம்பதியினர். அதே பகுதியை சேர்ந்த இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்களது மகன் பெயர் சரவணன் வயது 4. இவருக்கு அருகில் இருந்த பெட்டிக்கடையில் 10 ரூபாய் விலை உள்ள மாஸா ஜூஸை வாங்கி கொடுத்துள்ளனர். ஆர்வமுடன் ஜூஸை குடித்த சிறுவன் சரவணனுக்கு ஜூஸ் கசக்கி இருக்கிறது. இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் தெரிவிக்கையில், அவர்கள் அந்த ஜூஸ் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது குட்டி எலி ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ஜூஸில் எலி இருந்ததை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் போட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் மக்கள் அதிகம் வாங்கும் மாஸா ஜூஸில் எலி இறந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.