ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் 24 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 33,377 கடைகள் கூட்டுறவுத்துறையால் நடத்தப்படுகிறது. இந்த ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்டவை மானிய விலையில் 2 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் பொருட்களை யாராவது ஏமாற்றி பெறுவதை தவிர்க்க ஆதாருடன் இணைக்கப்பட்ட ரேஷன் கார்டு இவருடையதுதானா என்பதை கண்டறிய கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வரும்போது அந்த கிடங்குகளில் இருக்கும் எடை மெஷினும், கம்ப்யூட்டரும் ப்ளூடூத் மூலம் இணைக்காமல் குறைந்த எடையிலேயே கடைகளுக்கு கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், ரேஷன் கடைக்கு உட்பட்ட அனைத்து மக்களுக்கும் எப்படி பொருட்களை முழுமையாக கொடுக்க முடியும் என ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, சரியான எடையில் உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து கொடுக்க வேண்டும், ஊழியர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் ஊதியம் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 24 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.