பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் மளிகை பொருட்கள், உணவுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகிறது. இந்த பொருட்களை மக்கள் பலரும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பொருட்கள் தொடர்பாக தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தை யோகா குரு ராம்தேவும் அவரது நண்பர் பாலகிருஷ்ணாவும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனாவை அலோபதி மருந்துகளால் சிகிச்சையளிக்க முடியாது என்றும் தங்களது நிறுவனத்தின் தயாரிப்புகளே கொரோனாவை தடுக்கும் என்றும் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்தது. இதனை எதிர்த்து இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தவறான தகவல்களை வெளியிட்ட பாபா ராம்தேவும் அவரது நண்பரும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், அதை விளம்பரமாக வெளியிட வேண்டுமென்றும் கூறப்பட்டது. இந்த சம்பவம் வெடித்த நாள் முதல் பதஞ்சலி பொருட்களை வாங்குவதை பலரும் தவிர்த்து விட்டனர்.
இந்நிலையில், பதஞ்சலி சார்பில் 200 கிராம் எடை கொண்ட சிகப்பு மிளகாய்த் தூள் விற்பனைக்கு வந்தது. இது குறித்து உணவு கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு புகார்கள் சென்றன. மேலும், இந்த பொருட்கள் உணவுக் கட்டுப்பாட்டு துறையின் சோதனைக்கு வரவில்லை என்பதால், அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில், மிளகாய்த் தூளில் பூச்சி மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த பொருட்களை உடனடியாக திரும்ப பெறுமாறு உணவு கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சுமார் 4 டன் மிளகாய் தூள் பாக்கெட்டுகளை பதஞ்சலி நிறுவனம் திரும்ப பெறுகிறது. மேலும் வாடிக்கையாளர்களும் இந்த மிளகாய் தூள் பாக்கெட்டுகளை வைத்திருந்தால், தங்களிடம் ஒப்படைக்குமாறும், அப்படி செய்தால் முழு பணத்தையும் திருப்பி தருவதாகவும் பதஞ்சலி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.