தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு ரூ.1,000 அறிவித்துள்ள நிலையில், இந்த பொங்கல் பரிசு யாருக்கெல்லாம் கிடைக்கும் யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகையின்போது தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படும். அதன்படி, இந்தாண்டும் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. கடந்தாண்டு பொங்கல் சமயத்தில் பரிசுத் தொகை எதுவும் இல்லாமல், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு என மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்தாண்டு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்கள் வரும் 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும், அனைவருக்கும் இந்த பரிசுத் தொகை கிடைக்காது. பொங்கல் பரிசாக வழங்கப்படும் இந்த ரூ.1000 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். சர்க்கரை அட்டை வைத்து உள்ளவர்களுக்கு இது கிடைக்காது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. PHH, PHH-AAY, NPHH, NPHH-S,NPHH-NC என மொத்தம் 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன.

PHH என்று உள்ள கார்டுகள் Priority Household என்று அர்த்தம்.. இந்த ரேசன் கார்டுகளில் அரிசி, உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும். PHH-AAY என்றால் Priority house hold- Antyodaya Anna Yojana என அர்த்தம். இந்த ரேஷன் கார்டுக்கு 35 கிலோ அரிசி உள்பட அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். NPHH என்றால் Non Priority Household என்று அர்த்தம். இந்த மூன்று வகையான ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு கிடைக்கும்.
இன்னும் இரு வகையான ரேஷன் அட்டைகள் உள்ளன. ஒன்று NPHH-S. இது அட்டை வைத்திருப்பவர்களுக்குச் சர்க்கரை மட்டுமே கிடைக்கும். NPHH-NC என்றால் No Commodity. அதாவது இந்த ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு எந்த பொருளும் ரேஷன் கடைகளில் கிடைக்காது. இந்த இரண்டு வகையான ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களுக்குப் பொங்கல் பரிசு எதுவும் கிடைக்காது.