சென்னை மாநகராட்சியின் பொது இடங்களில் அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டுபவர் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சென்னையில் பல இடங்களில் அனுமதியின்றி சுவர்களில் போஸ்டர் ஒட்டி செல்வதாக புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. பாதுகாப்பு சட்டம் 1959ன் படி பொது இடங்களில் உள்ள சுவர்களில் விளம்பர சம்பந்தமான போஸ்டர் மற்றும் பேனர் ஏதேனும் வைக்க நேர்ந்தால் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் ஒட்டப்படும் போஸ்டர்கள் அகற்றப்பட்டு ஒட்டியவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு போஸ்டர்கள் ஓட்டுபவர்கள் மீது தற்பொழுது வரை காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் பட்சத்தில், கடந்த மாதம் மட்டும் 30ஆம் தேதி முடிவடைவதற்குள் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.1.37 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல இம்மாதம் 15ஆம் தேதிக்குள் இதே போல 15 மண்டலங்களிலும் போஸ்டர் ஒட்டிய 252 நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு அவர்களிடம் இருந்தும் ரூ.1.21 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முடிவதற்குள்ளேயே அபராத தொகையானது ஒரு லட்சத்தை தாண்டும் பட்சத்தில் தற்பொழுது கடுமையான விதிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.