தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறதோ, அதே அளவுக்கு மோசடி சம்பவங்களும் அதிகரித்துள்ளது. அதனால்தான் பொதுமக்களுக்கு, நம்முடைய காவல்துறை எந்நேரமும் விழிப்புணர்வுகளையும், அறிவுரைகளையும் வழங்கியபடியே உள்ளது. இதோ இப்போதும் பொதுமக்களின் நன்மை கருதி, ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், ”சென்னை சூளைமேடு, வன்னியர் தெருவில் வசிப்பவர் கார்த்திக்வேந்தன். இவரது ஏடிஎம் கார்ட் கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று தொலைந்து போயுள்ளது.
கார்த்திக்வேந்தனின் ஏடிஎம் கார்டை யாரோ பயன்படுத்தி 3 தவணைகளாக ரூ.11,870 பணம் எடுத்துள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. உடனே இதுகுறித்து கார்த்திக்வேந்தன் சூளைமேடு (F-5) காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீவிர விசாரணை செய்த போலீசார், ஆந்திராவைச் சேர்ந்த தல்லா ஶ்ரீனிவாசலு ரெட்டி (27) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 லேப்டாப், 1 செல்போன், 2 ஸ்வைபிங் மெஷின்கள், 64 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், விசாரணையில் கைது செய்யப்பட்ட தல்லா ஶ்ரீனிவாசலு ரெட்டி அவரது கூட்டாளியுடன் சேர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள ATM மையங்களுக்கு சென்று, அங்கு பொதுமக்கள் தவறவிட்டு சென்ற Wifi ஏடிஎம் கார்டுகளை எடுத்துள்ளனர். பின்னர், ஏடிஎம் கார்டிலிருந்து பணத்தை ஸ்வைபிங் மெஷின் பயன்படுத்தி வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கும், ஆன்லைன் ரம்மி கணக்குக்கும் பணப்பறிமாற்றம் செய்து மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
பொதுமக்கள் ஏடிஎம் கார்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளவும், அதை பயன்படுத்தும் போது மிகுந்த கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் இருக்குமாறு சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ’சோகமா இருந்தா 10 நாட்களுக்கு விடுமுறை’..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்..!!