குடிமக்கள் சேவைகள், பயன்பாட்டு கட்டணங்கள் மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளை இனி எளிதாக வாட்ஸ்அப் மூலமே பெறலாம் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுகுறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டார். அரசின் சேவைகள், கட்டணம் செலுத்துதல், இ-சேவை மைய சேவைகள் இனி வாட்ஸ் அப்பில் கிடைக்கும் என்றும் இதனால் இனி மக்கள் இ-சேவை மையங்களுக்கு செல்ல வேண்டியதில்லை என்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்..
எளிதான அணுகலை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு அரசு, 34,843 இ-சேவை மையங்கள் மூலம் 260 குடிமக்கள் சேவைகளை வழங்கி வருவதாக அமைச்சர் பிடிஆர் கூறினார். ரூ.3.85 கோடி செலவில், பயன்பாட்டு பில் செலுத்துதல்கள் உட்பட 50 சேவைகள் முதல் கட்டமாக வாட்ஸ்அப் மூலம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இணைய தேவை அவசியமாகிவிட்டதை கருத்தில் கொண்டு வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை வழங்கப்பட்டது போல, குறைந்த கட்டணத்தில் இணையதள சேவை கேபிள்கள் மூலம் வழங்கப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இந்த சேவையை மக்களுக்கு கொண்டுச் செல்லப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.