சென்னையில் கனமழை காரணமாக உணவின்றி தவிப்போர் மாநகராட்சியின் எக்ஸ் தளத்தில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழைப்பொழிவு காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் அங்கு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, பல இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக மாறியிருப்பதால் நிவாரண முகாம்களுக்கு செல்வதில் பொதுமக்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்கள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறியுள்ள மக்கள் உணவு தேவைப்பட்டால் சென்னை மாநகராட்சியின் எக்ஸ் தளத்தில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதிவுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உணவு கிடைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.