வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் புதுச்சேரியை கடக்க வாய்ப்புள்ளது என்றும், அதிகபட்சமாக புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை ஒட்டி கடக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக, நாளை நள்ளிரவில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்” என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையம் தென்மண்டல தலைவர் பாலசந்திரன், ”புயல் காரணமாக வரும் 10ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார். இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார். நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.