தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணையின் முழு கொள்ளவான 71 கனஅடியில் 70 கனஅடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று வரை வைகை அணைக்கு சுமார் 3,127 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அதில் சுமார் 2,069 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று அதிக அளவில் கனமழை பெய்ததால், வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைக்கு வரக்கூடிய தண்ணீர் முழுவதுமாக சுமார் 4,000 கனஅடி வைகை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால், வைகை ஆறு செல்ல கூடிய பகுதிகளான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வாசிக்க கூடிய மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.