டெல்லியின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் மாலை 4 மணி நிலவரப்படி 35 தொகுதிகளில் வெற்றி, 13 தொகுதிகளில் முன்னிலை என பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி 16 தொகுதிகளில் வெற்றி 6 தொகுதிகளில் முன்னிலை என 22 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. காங்கிரஸை பொறுத்தவரை ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்கள் சக்தியே முதன்மையானது..! பாஜகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கொடுத்த அனைவருக்கும் எனது வணக்கமும் வாழ்த்துக்களும். நீங்கள் எனக்கு அளித்த ஆசிர்வாதங்களுக்கும், அன்புக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். டெல்லியின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.
வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் டெல்லி முக்கிய பங்கு வகிக்கும். இரவும் பகலும் உழைத்த எனது அனைத்து பாஜக தொண்டர்களையும் நினைத்து பெருமைப்படுகிறேன். இப்போது டெல்லி மக்களுக்கு இன்னும் வலிமையுடன் சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் இருப்போம்” என பதிவிட்டுள்ளார்.