தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் வரும் 13,14ஆம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி வீசிய குளிர் காற்றின் காரணமாக குளிரும், பனி மூட்டமும் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் இன்னும் கோடைக்காலம் தொடங்கவில்லை என்றாலும், வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கு காற்றின் ஈரப்பதம் குறைந்ததே காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 12ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது.
பிப்ரவரி 13, 14ஆம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.