திராவிட மாடல் அரசின் காலம்தான் தமிழ்நாடு காவல்துறையின் பொற்காலம் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கில் சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், முதல்வர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு 3,359 காவல்துறை, சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், “165 ஆண்டுகள் பழமையும், பெருமையும் மிக்கது தமிழ்நாடு. இன்ப, துன்பங்களை மறந்து ஊருக்காக பணியாற்றும் சீருடைப் பணியாளர்களை வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும், “காவல்துறையை மேம்படுத்த முதல்முறையாக காவல் ஆணையம் அமைத்தது திமுக அரசு தான் என்றும் காவலர்களுக்கான இடர்படி ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் திராவிட மாடல் அரசின் காலம்தான் தமிழ்நாடு காவல்துறையின் பொற்காலம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
ஸ்காட்லாந்து யார்டு போலீசாருக்கு இணையாக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். மக்களுக்கு காவல்துறையினர் மீது பயம் இருக்கக் கூடாது. மரியாதை தான் இருக்க வேண்டும். புகாரளிக்க வரும் மக்களிடம் போலீசார் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். உயரதிகாரிகள் கீழ்நிலை காவல்துறையினருடன் நட்புணர்வோடு பழக வேண்டும். கீழ் நிலை காவலர்களுக்கு பயம் வரும் வகையில் பழகக் கூடாது” என்று தெரிவித்தார்.
Read More : சென்னையை நெருங்கும் புயல்..!! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..?