நிஃபா வைரஸ் பரவலையடுத்து 24ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வெள்ளிக்கிழமை நிஃபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அம்மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 24ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தடுப்பூசிகளை இந்தியா வாங்க உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிஃபா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 வயது சிறுவன் உள்பட 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கேரளா முழுவதும் மக்கள் முக்ககவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலம் கோழிகோட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செப்டம்பர் 24ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.