ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடக்கும் நிலையில், அரசுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து உள்நாட்டு போர் துவங்கியது. ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது. 2021 ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்பதால் பயந்துபோய் ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். அதன்படி, தற்போது ஆப்கானிஸ்தானில் கடும் கட்டுப்பாடுகள், விதிகள் அமலில் உள்ளன. மேலும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கும், பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை உள்நாட்டில் வசிப்பவர்கள் முதல் வெளிநாட்டினர் வரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது வெளிப்படையாக தலிபான் அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி பொதுமக்கள் காரணம் எதுவுமின்றி தலிபான் அரசு, அரசின் அறிஞர்கள், ஊழியர்களை விமர்சனம் செய்வதை நிறுத்த வேண்டும். மீறினால் தண்டனை வழங்கப்படும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய மக்களின் விமர்சனம் என்பது அரசுக்கு எதிரான பிரச்சாரமாக இருப்பதோடு, இது எதிரிகளுக்கு சாதகமானதாக மாறலாம் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த உத்தரவுப்படி ராணுவ பணியில் உள்ளவர்களை தொடுவது, ஆடைகளை விலக்குவது, அவர்களை விமர்சனம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலிபான் தலைவர் முல்லா ஹெபத்துல்லா அகுந்த்சாதாவின் அறிவுரைப்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை மக்கள் மற்றும் ஊடகங்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அந்த செய்தி கூறுகிறது.