விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார்.
கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் வீடுகள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த சூழ்நிலையில், சம்பவங்கள் நடைபெற்ற இடங்களை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கோவை விரைந்துள்ளார். இந்நிலையில், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பால்ராஜ் என்பவரது வீட்டில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டு வாகனங்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தில் சிக்கந்தர் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் டிஐஜி தலைமையில் இரவு ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. முக்கியமான நபர்களின் வீடுகள், அலுவலகங்கள், தொழில் செய்யும் இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற செயலில் ஈடுபடுவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் சந்தேகக் கூடிய நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தென் மாவட்டத்தை பொறுத்தவரை 2 வழக்குகள் தற்போது வரை பதிவாகியுள்ளது. விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தென் மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் உரிமையாளர்களுக்கு சில்லறை முறையில் பெட்ரோல் பாட்டில்களில் வழங்கக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.