கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மகள் சுஜிர்தா (27) என்பவர் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு, எம்டி மருத்துவ பட்ட மேற்படிப்பு 2ஆம் ஆண்டு பயின்று வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வரும் இவர், கல்லூரிக்கு வராததால் சக மாணவிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அவர் மயங்கிய நிலையில் கிடந்ததால், அவரை கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சுஜிர்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, மாணவியின் தந்தை சிவக்குமார் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், கடந்த 6ஆம் தேதி மாலை கல்லூரி நிர்வாகம் சார்பில் தன்னிடம் செல்போனில் பேசியவர், சுஜிர்தா விஷ உசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்ததாகவும் இது தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது மகளின் மரணத்தில் மர்மம் இருக்கிறது எனவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் கல்லூரி விடுதியில் நடத்திய சோதனையின் போது சுஜிர்தா ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அக்கடிதத்தில் பெண் பேராசிரியை உட்பட 3 பேராசிரியர்கள் தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், அதில் ஒரு பேராசிரியர் மனதளவிலும் உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் சுஜிர்தா பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு, அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.