சர்வதேச அளவில் பாராட்டுகளும், விருதுகளும் பெற்று தமிழகத்துக்கே பெருமை சேர்த்தது கோவை மாவட்டத்தில் உள்ள ஓடந்துறை ஊராட்சி. ஓடந்துறை ஊராட்சியில் தொடர்ந்து பத்தாண்டுகள் தலைவராக இருந்தவர் சண்முகம். பத்தாம் வகுப்புகூட தாண்டாத சண்முகம், ஓடந்துறை கிராமத்தையே முன்மாதிரிக் கிராமமாக மாற்றியவர்.
1996-ல் அவர் முதல் முறையாக ஊராட்சி மன்ற தலைவரானார். அப்போது ஊராட்சியில் உள்ள 9 கிராமங்களில், ஒரு கிராமத்தில் மட்டும்தான் குடிநீர் வசதி இருந்தது. அவர் பதவி யேற்ற ஓராண்டிலேயே 8 ஆழ்குழாய்க் கிணறுகளும், 8 குடிநீர்த் தொட்டிகளும் அமைத்தார். பின்னர், பவானி ஆற்று நீரை சுத்திகரித்து வழங்க நடவடிக்கை எடுத்தார். ஊராட்சி பகுதிக்கு நிரந்தர வருமானம் கொண்டு வரவும், மின்சார தேவையைப் பூர்த்தி செய்யவும் அப்பகுதியில் காற்றாலை அமைத்தார். அவரின் பதவி காலத்தில், ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை மீட்டு 250 வீடுகள், பசுமை திட்டத்தின் கீழ் 101 தொகுப்பு வீடுகள் என 850 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளனர்.
சிறந்த ஊராட்சி பகுதியாக விளங்கிய ஓடந்துறை கிராமம் மத்திய, மாநில விருதுகள் பலவற்றை பெற்றுள்ளது. உலக நாடுகளின் கவனத்தையும் பெற்றது. ஓடந்துறை பஞ்சாயத்து தலைவராக இருந்து சண்முகம் நிகழ்த்தி காட்டிய மாற்றங்கள் பல செய்திகளில், மேடைகளில் பெரிதாய் பேசப்பட்டது. இவரது சாதனைகளுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேரடியாக விருது வழங்கி கவுரவித்தார்.
உள்ளூர் லயன்ஸ் கிளப்பில் துவங்கி, உலக வங்கி, ஜப்பான் பாராட்டு, பாரத் ரத்னா விருது, ராஜீவ்காந்தி சுற்றுச்சூழல் விருது வரை விருதுகள் குவிந்து இதுவரை 53 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த கிராமத்தை பார்த்து ஆய்வு செய்து பாராட்டி உள்ளனர்.
பத்து ஆண்டுகள் பஞ்சாயத்தின் தலைவராக இருந்த சண்முகம், கிராமம் முன்னேற வேண்டும் என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கியதன் விளைவாக, தேசிய அளவிலே முன்னோடி, முன்மாதிரி கிராமமாக திகழ்கின்றது. ஒரு பஞ்சாயத்து தலைவர் நினைத்தால், உலக நாடுகளையும் தங்களது கிராமத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்பதற்கு ஓடந்துறை சண்முகம் சிறந்த உதாரணம்.
Read more: எப்புட்றா.. இரண்டு முறை பிறந்த ஒரே குழந்தை.. மருத்துவ வரலாற்றில் புதிய சாதனை..!! எப்படி சாத்தியம்..?