திருச்சியில் ரயிலை கவிழ்க்கும் நோக்கில் தண்டவாளத்தில் லாரி டயர்கள் வைக்கப்பட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
திருச்சி – சென்னை ரயில் வழித்தடத்தில் வாளாடி அருகே கடந்த 2ஆம் தேதி இரவு தண்டவாளத்தின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த 2 கனரக வாகன டயர்கள் மீது கன்னியாகுமரி விரைவு ரயில் மோதி நின்றது. இந்த விவகாரம் தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், பெரியார் நகரை சேர்ந்த வெங்கடேசன், பிரபாகரன், கார்த்திக் ராஜா ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் வெங்கடேசன் என்பவர் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் தண்டவாளம் ஓரம் மது குடித்துக்கொண்டிருந்த பிரபாகரன், கார்த்திக் ராஜா ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், பெரியார் நகரில் சாலை அமைக்க விடாத ரயில்வே துறையின் மீதான கோபத்தில் ரயிலை கவிழ்க்க அவர் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், அருகே கிடந்த லாரி டயர்களை உருட்டி வந்து தண்டவாளத்தில் வைத்ததாக கூறியுள்ளார். தனது குற்றத்தை வெங்கடேசன் ஒப்புக்கொண்டதாக கூறப்படும் நிலையில், மற்ற இருவரும் ஒப்புக் கொள்ளாததால் அவர்களிடம் விசாரணை தொடருகிறது. இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.