அம்மா உணவகங்களை தனியார் அறக்கட்டளை உதவியுடன் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை முழுவதும் 407 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு 3 வேளையும் மலிவு விலையில் உணவு கிடைக்கிறது. இந்த அம்மா உணவகங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.140 கோடி செலவாகிறது. ஆனால், வருவாயாக ரூ.20 கோடி மட்டுமே கிடைக்கிறது. மீதம் ரூ.120 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, அம்மா உணவகத்தின் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் செயல்படும் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்கு நிதி திரட்ட ஒரு அறக்கட்டளை அமைப்பது தொடர்பாக அந்த குழு பரிந்துரை அளித்தது. பல்வேறு அமைப்புகளிடம் நிதி பெற்று அம்மா உணவகத்தை நடத்தினால் நஷ்டத்தை தவிர்க்கலாம் என்று கூறப்பட்டது. அம்மா உணவக அறக்கட்டளை அமைக்க ஏற்கனவே அதிமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, அம்மா உணவக அறக்கட்டளையை தொடங்க திமுக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், ”அறக்கட்டளை தொடங்கிய பிறகு போதிய நிதி கிடைக்காத பட்சத்தில் அந்த நிதியை தமிழக அரசு முழுமையாக அளிக்குமா? நிதியே கிடைக்காவிட்டால் தொடர்ந்து அம்மா உணவகத்தை செயல்படுத்த அரசு நிதி அளிக்குமா?” என கேள்வி எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்த தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நஷ்டம் ஏற்படாமல் அம்மா உணவகத்தை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அறக்கட்டளைக்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் பொதுமக்கள் விரும்பி நிதி அளிக்கும் பட்சத்தில் அவற்றை ஏற்பது குறித்து அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட நிதி, அம்மா உணவகத்தை செயல்படுத்த செலவான நிதி ஆகியவை பற்றி ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்” என்று தெரித்தனர்.