தென் அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் ராவ்டன் தீவில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் மொத்தம் 17 பயணிகள் பயணித்துள்ளனர். விமானத்தில் திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டதால், விமானம் நடுக்கடலில் விழுந்துள்ளது.
இந்த விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 5 பேர் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஹோண்டுராஸின் ராவ்டன் தீவின் கடற்கரையில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் விமானத்தில் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் பிரபல கரிஃபுனா இசைக்கலைஞர் ஆரேலியோ மார்டினெஸ் சுவாசோவும் ஒருவர் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஒரு அமெரிக்க நாட்டவர், ஒரு பிரெஞ்சு நாட்டவர் மற்றும் இரண்டு சிறார்களும் அடங்குவர். விமானம் ஹோண்டுரான் நிலப்பரப்பில் உள்ள லா சீபா விமான நிலையத்திற்கு பறக்க திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது