திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (47). இவர், பாஜகவில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நேற்றைய முன்தினம் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த மாணவியிடம் சரவணன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இந்த மாணவி, ஐஸ்வரியம் கார்டன் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாக கூறப்படுகிறது.
சரவணனின் பாலியல் சீண்டலால் பயந்து போன மாணவி, அங்கிருந்து தப்பித்து, அப்பகுதி இளைஞர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து, ஆத்திரமடைந்த இளைஞர்கள் பைக்கில் வந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி சரவணனை தட்டிக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அந்த இளைஞர்கள் கல்லூரி மாணவியிடம் மன்னிப்பு கேட்குமாறு மிரட்டியுள்ளனர். இதையடுத்து, பாஜக நிர்வாகி சரவணனும் அந்த மாணவியிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்புக் கேட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மாணவியிடம் பாஜக நிர்வாகி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து பதிவிட்டு வருகின்றனர்.