பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்படுள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்தவகையில், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்.5ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக அவகாசம் வழங்கி அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். பிப்ரவரி 3 முதல் 10ஆம் தேதி வரை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்பும் மாணவர்கள் உடனடியாக இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.