கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 11ஆம் வகுப்பு மாணவனை கல்லூரி மாணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மாதவபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஷ்ணுபரத் (வயது 17) தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், பொதுத்தேர்வு முடிந்து முடிவுக்காக காத்திருந்தான். தற்போது கோடை விடுமுறை என்பதால், நண்பர்களுடன் அந்த பகுதியில் நடைபெற்ற கோவில் விழாவுக்கு நேற்றிரவு சென்றுள்ளான். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்துரு (21) என்ற இளைஞர் வந்துள்ளார். இவர், தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் நிலையில், ஆட்டோவும் ஓட்டி வருகிறார். இவருக்கும், விஷ்ணுபரத் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரம் அடைந்த சந்துரு, தான் ஓட்டும் ஆட்டோவின் சாவியோடு இணைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியால் விஷ்ணுபரத்தின் விலா மற்றும் பின்பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த விஷ்ணு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்துரு, விஷ்ணு பரத்தை தன்னுடைய தூக்கி போட்டுக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே, மகன் கத்தியால் குத்தப்பட்ட தகவல் கிடைத்து விஷ்ணு பரத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை தேடி வந்தனர். அப்போது சந்துரு, தனது ஆட்டோவில் விஷ்ணுவின் உடலைக்கொண்டு வந்து வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார். இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்த மாணவனின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சந்துரு, திருவிழாவிற்கு நீ வரக்கூடாது என விஷ்ணு பரத்திடம் கூறியதாகவும், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் அவர் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.