12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பெண் வழங்கியதில், ஒரு சில மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு, மே 8ஆம் தேதி அரசுத் தேர்வுத்துறை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில் தமிழ்நாட்டில் 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் தேர்வினை எழுதிய நிலையில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகலைப் பெற்று தவறுகள் இருந்தால் மதிப்பெண்களை திருத்தம் செய்ய மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்து விடைத்தாள் நகலை மாணவர்கள் பெற்றனர். அவ்வாறு பெற்ற மாணவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மதிப்பெண்கள் அதிகமாக போடப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் காட்டிலும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள தகவலும் வெளியாகி இருக்கிறது. விடைத்தாள் நகலில் மதிப்பெண்கள் வழங்கிய விவரத்தை பதிவு செய்ததை காட்டிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு முடிவுக்கான மதிப்பெண் பட்டியலில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் முதல் 7 மதிப்பெண்கள் வரை அதிகமாக போடப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதேபோல் விடைத்தாள் திருத்தும் மையங்களிலேயே மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. தேர்வின்போது பெற்ற மதிப்பெண்களை விட கூடுதலாக மதிப்பெண்களை பதிவு செய்த ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு கூடுதலாக மதிப்பெண்களை வழங்கியது யார் என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. சில மாணவர்களுக்கு கூடுதலாக மதிப்பெண் வழங்கப்பட்டால், பிற மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான தரவரிசையில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.