பிளஸ்2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 2 ஆசிரியர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த தொண்டாமுத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (43) என்பவர் தாவரவியல் ஆசிரியராகவும், கோவை சிட்ராவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் இயற்பியல் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஆசிரியர்கள் இருவரும் அதே பள்ளியில் பிளஸ்2 படித்து வரும் பொள்ளாச்சியைச் சேர்ந்த 17 வயது மாணவிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அடிக்கடி பள்ளியில் வைத்து மாணவியை தொட்டு பேசுவது, ஆபாச வார்த்தைகளை கூறி பேசுவது என தொடர்ந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

ஆசிரியர்களின் தொல்லைகளை மாணவியால் மற்ற ஆசிரியர்களிடமோ, சக மாணவிகளிடமோ கூற முடியவில்லை. மேலும், பெற்றோரிடம் கூறினால் அவர்கள் தன்னை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்களோ என பயந்த மாணவி, இதுகுறித்து வெளியில் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர்கள் தொடர்ந்து மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். நாட்கள் செல்ல, செல்ல 2 ஆசிரியர்களின் தொல்லையும் அதிகரித்துக் கொண்டே இருந்துள்ளது. இதனால் இந்த பிரச்சனைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மாணவி தவித்து கொண்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து மாணவி தனக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் மீது புகார் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி, சம்பவத்தன்று மாணவி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு 1091 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் புவனேஸ்வரியிடம் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் கொடுத்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து, குழந்தைகள் நல அலுவலர் புவனேஸ்வரி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று மாணவியிடம் விசாரணை மேற்கொண்டார். இதில் ஆசிரியர்கள் 2 பேரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் புவனேஸ்வரி சம்பவம் குறித்து கோட்டூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் ஆசிரியர்கள் பாலச்சந்திரன், ராமகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோவை குனியமுத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். நேற்று ஒரே நாளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.