PM MODI: பாரதப் பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரத்தின் பாதுகாவலராக திகழ்கிறார் என பாஜகவின்(BJP) தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு தேதி நெருங்குவதை முன்னிட்டு அரசியல் களம் களைகட்ட தொடங்கி இருக்கிறது. தங்கள் கட்சியை மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின்(BJP) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தென் மாநிலங்களில் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த தீவிரமாக போராடி வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் வெற்றியை குறிவைத்து பாஜக தலைமை அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறது. தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டா தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அரியலூரில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர் அதனைத் தொடர்ந்து விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக திருமங்கலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்தப் பிரச்சாரத்தின் போது பேசிய ஜேபி நட்டா பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து விட்டதாக புகழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி(PM MODI) தமிழக கலாச்சாரத்தின் பாதுகாவலராக விளங்குவதாக தெரிவித்தார். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சமாதானத்தின் எதிரியாக விளங்குவதோடு சனாதன தர்மத்தை கலங்கப்படுத்துவதாகவும் தெரிவித்தார். திருமங்கலம் பொதுக்கூட்டத்திற்கு பிறகு திருச்சி செல்லும் ஜேபி நட்டா திருச்சியில் நடைபெற இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் வாகன பேரினியிலும் பங்கேற்க இருக்கிறார்.