ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, பீகார் மாநில ஆளுநர் பாகு சவுகான் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பீகார் மாநிலம் தர்பாங்கா மாவட்டத்தில் லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகத்தில் 3 மாவட்ட கல்லூரிகள் உள்ளது. அதில், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான ஹால் டிக்கெட் ஆன்லைன் மூலம் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், பி.ஏ. 3-ம் ஆண்டு படிக்கும் சில மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, பீகார் மாநில ஆளுநர் பாகு சவுகான் ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் முஷ்டாக் அகமது கூறுகையில், ”மாணவர்கள்தான் தங்களது புகைப்படம் மற்றும் மற்ற தகவல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவற்றை பரிசீலித்து, பல்கலைக்கழகம் ஆன்லைனில் அனுமதி சீட்டை வெளியிடும். சில குறும்புக்கார மாணவர்கள் பிரதமர் மோடி உள்ளிட்டோரின் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இதை தீவிரமாக எடுத்துக்கொண்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.