கடந்த மே மாதம் 28ஆம் தேதி பிரதமர் மோடி நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று நாடாளுமன்ற பழைய கட்டிடத்தில் பிரதமர் மோடி உரையை நிறைவு செய்துவிட்டு அனைத்து எம்பிக்களுடன் புதிய நாடாளுமன்றத்திற்கு சென்றார். இன்று மதியம் புதிய நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் நடைபெற்றது.
முன்னதாக, நாடாளுமன்ற பழைய கட்டிடத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று, இங்கிருந்து நாம் விடைபெற்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் செல்கிறோம். விநாயக சதுர்த்தி நாளான இது மங்களகரமானதாகும்” என்று பேசினார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர்களை நோக்கி பேசிய அவர், “நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் சிந்தித்துப் பார்த்த பிறகு அதைக் கருத்தில் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இப்போது நாம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு செல்கிறோம். இந்த அவையின் பெருமை ஒருபோதும் குறையக்கூடாது. நாம் இதை பழைய நாடாளுமன்றம் என்று மட்டும் அழைக்கக்கூடாது. நீங்கள் இருவரும் அனுமதித்தால், இந்தக் கட்டிடத்திற்கு ‘சம்விதான் சதன்’ என்று பெயரிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். (சம்விதான் சதன் என்றால் அரசியலமைப்பு இல்லம் என்று பொருள்)
‘சம்விதான் சதன்’ என்று நாம் அதை அழைக்கும்போது, ஒரு காலத்தில் இங்கு அரசியலமைப்பு நிர்ணய சபையில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவர்களின் நினைவுகள் அதோடு இணைக்கப்படும். இந்த வாய்ப்பை நாம் கைவிடக் கூடாது. இந்த அரிய பரிசை நான் அடுத்த தலைமுறைகளுக்கு வழங்குவோம்” என்று கூறினார். இதற்கிடையே, இந்தக் கட்டிடம் இடிக்கப்படாது என்றும், நாடாளுமன்ற தேவைகளுக்காகவே புனரமைப்பு செய்து பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.