நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளை கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இவற்றைப் பதுக்கி வைத்திருந்த நபர் தப்பி ஓடி இருக்கிறார் அவரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. கடல் சார் உயிரினங்களில் அரிதான உயிரினங்கள் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வெப்பமயமாதல் போன்றவற்றால் அழிந்து வருகின்றன. இதனால் இவற்றை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்களும் சுற்றுச்சூழல் துறையும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடல் வாழ் உயிரினங்களில் மிகவும் அரிய வகை உயிரினமான கடல் அட்டைகளை பிடிப்பதற்கு மீனவர்களுக்கு தடை விதித்திருக்கிறது அரசாங்கம் இந்நிலையில் நாகப்பட்டினம் பகுதிகளில் அவற்றைப் பிடித்து பதுக்கி வைத்து வெளிநாட்டிற்கு கடத்துவதாக காவல்துறை மற்றும் கடல்சார் காவல் குழுவிற்கு வந்த தகவலையடுத்து நாகப்பட்டினம் கடலோரப் பகுதிகளில் தீவிரமான சோதனையில் இறங்கியது கடலோர காவல் குழு.
இந்நிலையில் கடலோர காவல் குழு இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் காவல்துறையினர் நாகப்பட்டினம் கீரை கொள்ளை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு குடோனில் இருந்து 700 கிலோ அளவிலான கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக அந்த குடோனில் பதுக்கி வைத்திருந்தனர். இதன் மதிப்பு சுமார் 21 லட்சம் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவற்றை மீட்ட போலீசார் இது தொடர்பாக குடோனின் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர். காவல்துறையின் விசாரணையில் நாகப்பட்டினம் பெருமாள் வீதியைச் சார்ந்த முருகானந்தம் என்பவர் தான் அந்த குடோனின் உரிமையாளர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை தீவிரமாக தேடி வருகிறது கடலோர காவல் குழு. மேலும் கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.