இருசக்கர வாகனத்தில் போதுமான அளவுக்கு எரிபொருள் இல்லாததால், இளைஞருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ள வினோத நிகழ்வு கேரளாவில் அரங்கேறியுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியை அடுத்துள்ள பூக்காட்டுபள்ளியை சேர்ந்த பஷில்ஷியாம் என்ற இளைஞர், பணிக்கு தாமதமானதால் ஒருவழி பாதையில் தவறுதலாக சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளுடன் அவரை மடக்கி பிடித்த கொச்சி காவல்துறையினர், ரூ.250 அபராதம் விதித்துள்ளனர். அபராதத்தை கட்டிவிட்டு அவலுவலகத்திற்கு சென்ற ஷியாம் ஓய்வு நேரத்தில் ரசீதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அபராதத்திற்கான காரணம் மோட்டார் சைக்கிளில் போதுமான அளவுக்கு எரிபொருள் இல்லையென்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, ரசீதை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் ஷியாம் பதிவிட்டார். ஷியாமின் பதிவு வைரலானதை அடுத்து, அவரை தொடர்பு கொண்ட மோட்டார் வாகன போக்குவரத்து அதிகாரிகள், மென்பொருளில் ஏற்பட்ட பழுதால் குளறுபடி ஏற்பட்டதாக விளக்கம் அளித்தனர்.