ஓட்டுநர் உரிமத்தை முடக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..
பிரியஷா என்ற பெண் கடந்த மே 19 அன்று நகரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகனம் அதிவேகமாக சென்றதற்காக போக்குவரத்து போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அனுமதிக்கப்பட்ட வேக வரம்பு மணிக்கு 30 கிமீ என்ற நிலையில், அப்பெண் 62.1 கிமீ / மணி வேகத்தில் ஓட்டி உள்ளார்.. இதனால் அவரது வாகன உரிமத்தை போலீசார் கைப்பற்றினர்.
இதையடுத்து தனது ஓட்டுநர் உரிமத்தை திரும்பக் கேட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீசாருக்கு அப்பெண் மின்னஞ்சல் அனுப்பியபோது, அது 90 நாட்களுக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அப்பெண் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது ஓட்டுநர் உரிமத்தை காவல்துறை கைப்பற்றலாம், ஆனால் அந்த ஆவணத்தை வாகன உரிமையாளர், அதாவது மோட்டார் வாகனத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த பெண் தரப்பில் வாதிடப்பட்டது..
மேலும் ஓட்டுநர் உரிமம் முடக்கப்படுவதா அல்லது ரத்து செய்யப்படுவதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மோட்டார் வாகன ஆணையத்திற்கு மட்டுமே உள்ளது, காவல்துறைக்கு இல்லை என்று வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், மனுதாரரின் உரிமத்தை இரண்டு வாரங்களுக்குள் திரும்ப ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. எவ்வாறாயினும், வாகனம் ஓட்டும் போது மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், மற்றவர்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மனுதாரருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது..