அ.ம.மு.க., வேட்பாளர் டிடிவி தினகரன் மற்றும் கட்சி நிர்வாகி ராம் பிரசாத் மீது பறக்கும் படை அலுவலர் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மக்களவைத் தொகுதியில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய நேற்றுடன் கடைசி நாள் என்பதால், வேட்பாளர்கள் பலரும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இடம் பெற்றுள்ள டிடிவி தினகரன் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
தேனியில் மனு தாக்கல் செய்ய வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை வாகனத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் அவரது வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, அமமுக தொண்டர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர், தொண்டர்களைச் சமாதானப்படுத்தி தினகரன் வாகனத்துக்கு காவல் துறையினர் அனுமதி அளித்தனர்.
இதன்பின்னர், தேனியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேனி மனுத்தாக்கலில் தேர்தல் விதிமீறி போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த அ.ம.மு.க., வேட்பாளர் டிடிவி தினகரன் மற்றும் கட்சி நிர்வாகி ராம் பிரசாத் மீது பறக்கும் படை அலுவலர் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.