ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் அருகே நள்ளிரவு நேரத்தில் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு, 50 அடி தூரம் வரை நடந்து வந்தனர். அப்போது, இருவருமே முகமூடி அணிந்திருந்தனர். இந்நிலையில், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை காவல் நிலையத்தின் மீது வீசிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
நள்ளிரவு நேரத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், சம்பவ இடத்திற்கு உடனே காவல்துறை உயரதிகாரிகள் விரைந்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்திருந்த இருவரும் பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து, அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நள்ளிரவு நேரத்தில் எதற்காக காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச வேண்டும்..? முகமூடி அணிந்திருந்த நபர்கள் யார்..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், வியாபாரிகளை குறிவைத்து பணம் கேட்டு மிரட்டும் கும்பலால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதா, என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பழைய குற்றவாளிகள் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்டோரை பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.