கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய பொங்கல் என்பதால் அப்போதைய அதிமுக அரசு சார்பில் வழக்கமான பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. இதன் மூலம் பல விமர்சனங்களும் எழுந்தது. அதன் பிறகு திமுக அரசு பொறுப்பேற்றவுடன் பொங்கல் பரிசு மீது எதிர்பார்ப்பு கிளம்பியது, ஆனால் அரசின் நிதி மற்றும் கடன் சுமை காரணமாக ரொக்கப் பணத்துக்குபதிலாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதில் தரம் குறைந்திருந்ததால் பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து தரக்கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்டு போன்று கசப்பான அனுபவமே இருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த பொங்கல் பரிசு ஜனவரி 2ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு சுமார் ரூ.2 ஆயிரத்து 356.67 கோடி செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் பரிசானது ரேஷன் அரிசி அட்டைதாரர்கள் மட்டுமின்றி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் (ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ரூ.1,000 ரொக்கப் பணம்) வழங்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் ரேஷன் அரிசி அட்டைதாரர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதால், சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கு இந்து பரிசு தொடுகை கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.