பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 19,484 சிறப்பு பேருந்துகள் பொதுமக்களின் வசதிக்காக இயக்கப்படுகிறது.
பொங்கல் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ள நிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில் வசித்து வருபவர்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் 19,484 பொங்கல் சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்பட உள்ளது. இதில் சென்னையில் இருந்து மட்டும் 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
தென்மாவட்ட பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாகத்தில் இருந்தே புறப்படும். கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு, தாம்பரம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படும். பொதுமக்கள் இந்த முன்பதிவு மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். பொங்கலுக்கான சிறப்பு பேருந்துகள் இன்று ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 12, 13, 14ஆம் தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் தினசரி 2,100 பேருந்துகள் என மொத்தம் 6,300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மட்டும் 12 முதல் 14ஆம் தேதி வரை 4,706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதன்படி பொங்கலுக்காக மொத்தம் 11,006 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பிற ஊர்களில் இருந்து 8,478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
இதே போல் தென் மாவட்டங்களில் இருந்து மறுமார்க்கமாக சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு திரும்பி வர பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்புப் பேருந்துகள் குறித்து கூடுதல் தகவல்களுக்கு 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.