சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்க ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் செய்வதற்கு தேவையான சர்க்கரை, வெல்லம், பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களும் ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும். அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், பொங்கல் பரிசை பொதுமக்கள் எதிர்ப்பார்க்க தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, டிசம்பர் 16 ஆம் தேதி ரேசன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு படிப்படியாக அடுத்த 10 நாட்களுக்குள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை ரூ.1,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொங்கல் பரிசுடன் ஒரு கிலோ அரிசி மற்றும் சர்க்கரை வழங்குவதற்கான ஏற்பாடுகளை உணவுத்துறை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.