இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஜனவரி 12 முதல் 14 வரையிலும், பயணிகள் திரும்பி வருவதற்காக ஜனவரி 18 முதல் 19 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 6 வெவ்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், பேருந்துகள் இயக்கப்படும் இடங்கள் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான மக்கள் செல்வார்கள். இதற்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
–மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் ரெட்ஹில்ஸ், பொன்னேரி, கும்முடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக செல்லும்.
–கே.கே.நகர் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கத்திப்பாரா பாலம் எஸ்.வி.படேல் ரோடு. கிழக்குக் கடற்கரை சாலை வழியாக செல்லும்.
–தாம்பரம் மெப்ஸ் அண்ணா நிலையம் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும்.
–தாம்பரம் இரயில்வே நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, நெய்வேலி, செஞ்சி, பண்ருட்டி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும்.
–பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
–கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து (CMBT) மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.