திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்ட நிலையில், அமைச்சர் பதவியில் இருந்தும் அவரை நீக்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல அமைச்சர்களின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகியுள்ளன. குறிப்பாக, அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.என்.நேரு, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகளுக்கும், செயல்பாடுகளுக்கும் சமூகவலைதளங்களில் கண்டனம் எழுந்தது.
குறிப்பாக, அமைச்சர் பொன்முடி திமுக அரசின் திட்டத்தால் பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள் என்றும், ‘ஓசி பஸ்’ என்றும் ஒரு கூட்டத்தில் பேசியது விமர்சனத்திற்கு உள்ளானது. அதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழாவில் ஒன்றியக் குழு தலைவரைப் பார்த்து, “ஏம்மா…நீ எஸ்.சி தானே” என்று சாதியை குறித்து பேசியது சர்ச்சையானது.
அதேபோல், திருக்கோவிலூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கூட்டத்தில் இருந்த ஒரு பெண் நிறைய குறைகள் இருப்பதாகக் கூறினார். இதனால், எரிச்சல் அடைந்த அமைச்சர் பொன்முடி, “என்னது குறையா..? கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இரு” என்று கோபமாக பேசினார். பிறகு “உன் வூட்டுக்காரர் வந்திருக்காரா?” என்று பொன்முடி கேட்க.. அதற்கு அந்த பெண், அவர் போயிட்டார் (இறந்துவிட்டார்)” என்று தெரிவித்தார். அப்போது பொன்முடி “போயிட்டாரா… பாவம்… நல்லவேளை…” என்று சிரித்தார். இது அப்போது சர்ச்சைக்குள்ளானது.
இந்த சூழலில் தான், தற்போது மீண்டும் ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி பதவியை இழந்து நிற்கிறார் பொன்முடி. அதாவது, விழுப்புரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”விலை மாது வீட்டிற்கு ஒருவர் செல்வதை குறிப்பிட்டு பட்டையா..? நாமமா..? என்ற கேட்டு அதற்கு ஒரு மோசமான விளக்கத்தை கொடுத்து அனைவரையும் முகம் சுழிக்கும் வகையில் பேசியிருந்தார். சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பான இந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி பலரது கண்டனத்தையும் பெற்றது.
இந்த சூழலில் தான், திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த பொன்முடியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே, கட்சியில் இருந்து நீக்கம், நடவடிக்கைகள் போன்றவை பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் தான் அறிக்கை வெளியாகும். ஆனால், தற்போது திமுக தலைவரும், முதலமைச்சருமான முக.ஸ்டாலின் பெயரில் அறிக்கை வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான், அமைச்சர் பதவியில் இருந்தும் பொன்முடியை நீக்குவது தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.