கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ் (வயது 88). இவருக்கு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் 5 வாரங்களுக்குமேலாக சிகிச்சையில் இருந்து போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை வாடிகனில் உள்ள இல்லத்தில் காலமானார். காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் உயிர் பிரிந்ததாக வாடிகன் அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு காரணமாக போப் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை வாடிகன் மருத்துவ அதிகாரி ஆண்ட்ரியா அர்கான்ஜெலி வெளியிட்ட மரணச் சான்றிதழில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 88 வயதான போப், மறைவதற்கு முன் சுயநினைவு இழந்து கோமா நிலைக்கு சென்றிருந்தார் எனச் சான்றிதழ் குறிப்பிடுகிறது. கடந்த சில மாதங்களாகவே அவருக்கு இரட்டை நிமோனியா (double pneumonia) இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஈஸ்டர் ஞாயிறன்று அவரைக் காண மக்கள் பெரும் உற்சாகத்துடன் திரண்டபோது, போப் அவர்களும் திறந்த வாகனத்தில் வந்து மக்களுக்கு கைகாட்டி மகிழ்ச்சியளித்தார். இதன் மூலம் அவர் நலமடைந்துவருவதாகவே கருதப்பட்டது.
அலங்கரிக்கப்படாத கல்லறையை விரும்பிய போப்: இறுதிச் சடங்குக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் வெள்ளிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடையில் ஏதாவது ஒரு கட்டத்தில் இது நிகழும் என்று வத்திக்கான் தெரிவித்தது.
போப் ஃபிரான்ஸிஸ் அலங்கரிக்கப்படாத கல்லறையை விரும்பியாதாக வட்டாரங்கள் கூறுகின்றனர். அலங்காரம் இல்லாமல் வணக்கச் சின்னங்கள் இல்லாமல் தரையில் புதைக்கப்படவேண்டும் என போப் விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது பெயர் லத்தீன் மொழியில் “Franciscus” எனக் கல்வெட்டில் பதிக்கப்பட வேண்டுமென்றும் முன்னதாக தெரிவித்துள்ளார்.
லத்தீன் அமெரிக்காவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதல் போப்பாக இருந்த ஃபிரான்ஸிஸ், தனது பரிவும், எளிமையும், சமூக நீதி பற்றிய கோட்பாடுகளாலும் உலகம் முழுவதும் தனக்கென ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர்.