போப் பிரான்சிஸுக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் உடல்நல குறைவு காரணமாக இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆய்வகப் பரிசோதனைகள், மார்பு எக்ஸ்ரே மற்றும் போப் பிரான்சிஸின் ஒட்டுமொத்த மருத்துவ நிலையின் அடிப்படையில், அவரது நுரையீரல்கள் இரண்டிலும் நிமோனியா பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, போப் பிரான்சிஸ் பல நாட்களாக மூச்சுக்குழாய் அழற்சி அறிகுறிகளை அனுபவித்திருந்தார் என கூறப்படுகிறது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் நீடித்த நிலையில் சிடி ஸ்கேனில் நிமோனியா கண்டறியப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸின் உடல் நிலை சற்று சிக்கலாக இருப்பதாகவும், இருப்பினும் அவர் செய்தித்தாள் படிப்பதாகவும், பிரார்த்தனையில் ஈடுபடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது நலனுக்காக பிரார்த்திக்கும் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்ததாகவும் வாடிகன் அறிவித்துள்ளது.
போப் இளம் வயதிலேயே நுரையீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு 21 வயதில் ஒரு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டதால், அவர் நுரையீரல் தொற்றுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. 2025 கத்தோலிக்க புனித ஆண்டிற்கான வார இறுதியில் போப் பிரான்சிஸ் பல நிகழ்வுகளுக்கு தலைமை தாங்க திட்டமிடப்பட்டிருந்தது, இது அடுத்த ஜனவரி வரை தொடரும். இருப்பினும், அவரது நாட்காட்டியில் உள்ள அனைத்து பொது நிகழ்வுகளும் ஞாயிற்றுக்கிழமை வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.,
Read more : மது அருந்துவது 20 வகையான புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்..!