பிரபல நடிகர் ராமராஜன் சாமானியன் என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் 80களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்துலும் ரஜினி, கமல் என அனைவருக்கும் இணையாக ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் படத்திற்கு கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் இங்கு ஏராளம். அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்தார் ராமராஜன். அவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் ஒரு திரையரங்கில் ஒரு வருடம் ஓடி சாதனைப் படைத்தது. இவர் நடித்த புகழ்பெற்ற ஏனைய திரைப்படங்கள் எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு போன்ற பல திரைப்படங்கள் ஆகும். பின்னர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வி அடைந்ததால் தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை இழந்தார்.
பின்னர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.. இவர் 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.. பின்னர் அரசியலில் இருந்தும் விலகினார். ஓய்வில் இருந்த ராமராஜன் சாமானியன் என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை ராகேஷ் என்பவர் இயக்குகிறார். இதில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் உருவாகிறது.