பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் 15 நாள் நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
டிடிஎஃப் வாசன் என்பவர் இருசக்கர வாகன சாகச பயணத்தின் மூலம் யூடியூப்பில் பிரபலமானவர். யூடியூப்பில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர், அடிக்கடி அதிவேகமாக பயணம் செய்து சாகசங்களை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தன் இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை தூக்கி சாகசம் செய்தார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில், டிடிஎஃப் வாசன் படுகாயமடைந்தார். மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம், யூடியூபர் டிடிஎஃப் வாசனை அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, டிடிஎஃப் வாசன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.