மேட்டுப்பாளையத்தில் ஓடும் பேருந்தில் ஆபாசமாக நடந்த ஆசாமியை இளம்பெண் சரமாரியாக செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்த இளம்பெண் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து இளம்பெண் கோவை பேருந்தில் ஏறினார். அப்போது பக்கத்து இருக்கையில் இருந்த 50 வயதுக்கு மேலுள்ள ஆண் ஒருவர், திடீரென பெண்ணிடம் ஆபாச செய்கை காண்பித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண், வேறுபக்கம் திரும்பிக்கொண்டார். ஆனால், அந்த நபர் மீண்டும் வேறு கோணத்தில் நின்றுகொண்டு மீண்டும் மீண்டும் ஆபாச செய்கை காட்டி தொல்லை கொடுத்து கொண்டே இருந்ததால் பொறுமை இழந்த இளம்பெண், பஸ்சில் உரத்த குரலில் சத்தம் போட்டுள்ளார்.
இதனால் உஷாரான அந்த நபர், பஸ்சில் இருந்து மளமளவென கீழே இறங்கி ஓட்டம் பிடிக்க முயன்றார். ஆனால், அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கிய இளம்பெண், தனது காலில் இருந்த செருப்பை கழற்றி அந்த நபரை சரமாரியாக தாக்கினார். சில வாலிபர்களும் அவரை அடித்து உதைத்தனர். இதனால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் இருந்து அவரை மீட்டனர்.
விசாரணையில், அவரது பெயர் லாரன்ஸ் (50) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண், லாரன்சை செருப்பால் அடித்தபோது சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இளம்பெண்ணின் துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.