ஓ.பன்னீர்செல்வத்துக்கு மரியாதை குறைவு ஏற்படக்கூடாது என்பதற்காக இணை பொதுச்செயலாளர் பதவி வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான தங்கமணி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ”உச்சநீதிமன்றத்தில் நாம்தான் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவில்லை வழக்குகள் முடிந்த பிறகு நடத்துகிறோம் என தெரிவித்திருக்கிறோம். ஆனால் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்து விட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. திமுகவின் தூண்டுதலின் பேரில் சில பத்திரிகைகளும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை என தகவல் பரப்பி வருகின்றன.

ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். அதிமுக ஆட்சிக்கு எதிராகவும் வாக்களித்தார். இருப்பினும் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அப்படியிருந்தும் அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்-ஐ அரவனைத்தார். அதேபோல், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் ஆரம்பித்த பிரச்சனை, யார் எதிர்க்கட்சி தலைவர் என்பது வரை நீடித்தது. எப்படியோ போராடி எடப்பாடியாரை எதிர்க்கட்சி தலைவராக்கினோம்.

மாநிலங்களவை எம்பி தேர்தலின் போது, வேட்பாளரை அறிவிக்க முடியாமல், ஓபிஎஸ் தாமதம் செய்தார். யாரை அறிவித்தாலும் அவர் குறுக்கீடு செய்தார். இதனால், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தினோம். அதில், 95 சதவீதம் பேர் எடப்படியார் வரவேண்டும் என விரும்பினர். ஆனால், அதிமுக ஒன்றாக இருக்கக்கூடாது என சூழ்ச்சி செய்தவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். இவ்வளவு பிரச்சனைகள் செய்த போதிலும், ஓபிஎஸ்-க்கு மரியாதை குறைவு ஏற்படக்கூடாது என்பதற்காக இணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்ற ஓபிஎஸ் நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கினார். விரைவில் தேர்தல் நடத்தி எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஆவார்”. இவ்வாறு அவர் பேசினார்.